Karma Yoga
Yoga — via Namadwaar Singapore
Radhe Radhe
Simple explanation for “Karma Yoga”.
How beautifully explained!
கர்மயோகம்
கர்மயோகம் என்றால் என்ன? ஒரு பக்தர்
ரமண மஹரிஷியிடம் கேட்டார்.
மஹரிஷி புன்முறுவலுடன் மெளனம் காத்தார். ஒருவேளை அவர்களுக்குத் தான் சொன்னது காதில் விழவில்லையோ?
இன்னும் சற்றே நெருங்கிப் போய் மீண்டும் “கர்மயோகம் என்றால் என்ன?"என்றார்.
இந்த முறை மஹரிஷி திரும்பிப் பார்த்து, தான் அந்தக்கேள்வியை மனதில் வாங்கிக் கொண்டதை
முக பாவத்தாலேயே காட்டினார்.
மீண்டும் மெளனமே அங்கு நிலவியது. சரி!
மஹரிஷிக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை போல
என்று எண்ணிக் கொண்டார் பக்தர்.
காலை உணவு முடிந்தவுடன் மலை மீது உள்ள ஸ்கந்த ஆஸ்ரமத்திற்குச் செல்லும் பாதைக்கு மஹரிஷி வந்தார். பக்தர்களும் அவருடன் பின் தொடர்ந்தனர்.
"அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா..." என்று பக்தர் குழாம் பாடத் துவங்கியது.
மஹரிஷியும் அவர்களுடன் பாடிக் கொண்டே மலை ஏறத் துவங்கினார்.
சிறிது தூரம் சென்றவுடன் மூங்கில் கழி ஒன்று தன் புதர்க் கூட்டத்திலிருந்து விலகி ஒற்றை அடிப்பாதையில் வேரோடு முறிந்து கிடந்தது.
அந்தக் கழி முண்டு முடிச்சுக்களுடன் காணப்பட்டது. அந்தக் கழி செய்த பாக்கியம், அது மஹரிஷியின் பார்வையில் பட்டது.
குனிந்து அந்தச் சீரற்ற கம்பை மஹரிஷி கையில் எடுத்தார். தன் லங்கோட்டுக் கயிற்றிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்தார்.
இந்தக் கழி கிடைக்கும், அதை சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவே கத்தி எடுத்து வந்தாரா மஹரிஷி? யாருக்குத் தெரியும்?
காலையில் கர்ம யோகத்தைப் பற்றிக் கேட்ட பக்தர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே கூட வந்தார்.
மஹரிஷி அந்தக் கழியை அன்புடன் நோக்கி மெது மெதுவாக அந்தக் கழியில் இருந்த முண்டு முடிச்சுக்களை எல்லாம் நீக்கத்தலைப்பட்டார்.
அவர் செயல்படும் விதத்தைப் பார்த்தால் அந்தக் கழிக்கு வலிக்குமே என்று கவலைப்படுபவர் போல இருந்தது.
ஒவ்வொரு முறை சீவும் போதும் சீவிய இடத்தை மெல்ல அன்புடன் தடவிக் கொடுப்பார்.
இப்படியே கோணல் மாணலாக இருந்த கழியை சீர் செய்து நேராக்கி விட்டார் மஹரிஷி, கூட வந்த பக்தர்கள் குறிப்பறிந்து 'நாங்கள் செய்து தருகிறோமே' என்று கேட்ட போதும் மஹரிஷி தரவில்லை.
தானே அந்தக் கழியை சீராக்கும் பணியை ஆர்வத்துடன் மேற்கொண்டார்.
அந்த நிமிடத்தில் அதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவருக்கு இல்லாதது போல நடந்து கொண்டார்.
‘சிரத்தை' என்பது இதுதானோ என்று பக்தர் நினைத்துக்கொண்டார்.
அந்தக் கழி இப்போது சீர் ஆகிவிட்டது. கழியைத் தன் இடக்கரத்தால் தேய்த்துப் பார்த்தார் மஹரிஷி.
சொர சொரப்பாக இருந்தது.
உடனே அங்கிருந்த காய்ந்த சருகுகளைக் கை நிறைய அள்ளி கழிக்கு 'பாலிஷ்' போட்டார்.
சிறிது நேரத்தில் உறுதியான ஒரு கம்பு தயாராகி விட்டது. கம்பின் உறுதியை சோதனை செய்ய ஒரு சிறிய பாறை மேல் ஏறி நின்று கம்பை ஊன்றிக் கொண்டு பாறை மீதிருந்து குதித்துப் பார்த்தார்.
கம்பு வளையவில்லை. மஹரிஷியின் முகத்தில் திருப்தி தெரிந்தது.
மஹரிஷி தனக்கான ஊன்று கோலை கவனத்துடன் செய்து, அதனைப் பயன் படுத்துவதினைக் கண்டு மகிழ்ந்தனர் பக்தர்கள்.
இனி அந்தக் கழியை மஹரிஷி எப்போதும் வைத்திருப்பார் என்று எண்ணிக் கொண்டனர். கம்பை ஊன்றிக் கொண்டு வேகமாக நடந்து மலை மீதிருந்த ஸ்கந்த ஆஸ்ரமத்தைச் சென்றடைந்தார் மஹரிஷி.
அங்கே சென்று துதிப் பாடல்கள் பாடியும், தியானத்தில் ஆழ்தும் இருந்து விட்டு அனைவருடனும் மலையை விட்டுக் கீழிறங்கினார்.
அந்தக் கழியை நன்கு பயன்படுத்தினார். அவர் வேகமாக இறங்க கழி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பாதிவழி வரும்போது ஓர் இடைச்சிறுவனைக் கண்டார் மஹரிஷி.
அந்தச் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு சென்றான்.
வெறும் கையால் ஆடுகளைப் பத்தினான்.
ஆடு மேய்ப்பவர்களுக்கே உரிய நீண்ட கோல் அவனிடம் இல்லை.
அதைக் கண்ணுற்றார் மகரிஷி அந்தப் பையனை செய்கையால் அழைத்தார்.
செய்கையாலேயே "உன் கோல் எங்கே?" என்று கேட்டார். சிறுவனும் புரிந்து கொண்டு, "எங்கனயோ தொலைஞ்சு போச்சு சாமியோவ்!" என்றான்.
தன் கையில் இருந்த, தான் நீண்ட நேரம் செலவு செய்து சீராக்கிய கழியை, தன் பயன்பாட்டுக்கு என்பது போல் சிரத்தையுடன் செய்த கழியை, அந்தப் பையன் கையில் அன்புடன் கொடுத்தார் மஹரிஷி.
அந்த ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு என்னமோ பெரிய செல்வம் கிடைத்தது போல் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மஹரிஷியிடம் பெற்ற கோலைக் கொண்டு ஆடுகளை 'ஹை ஹை' என்று மகிழ்ச்சியுடன் பத்தினான்.
இப்போது மஹரிஷி பக்தர் முகத்தைப் பார்த்தார்.
மஹரிஷியின் அர்த்தபுஷ்டியான பார்வையில் பேராசிரியர் தெளிவடைந்தார்.
காலையில் கேட்ட கர்மயோகம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பொருள் இதுதானோ?
>>> ஒரு செயலைச் செய்யும் போது சிரத்தையுடன் செய்து, பலனைத் தியாகம் செய்து விடலே கர்மயோகம்
என்று பக்தருக்கு விளங்கியது.
கர்ம யோகத்தைப் பற்றி உபன்யாசம் பண்ணினால் போதுமா?
கர்மா என்றால் செயல் அல்லவா?
அதைத் தான் மஹரிஷி செய்து காண்பித்தார்.
“சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்- this is the essence “